புதுடில்லி :ஹிந்து கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களில் அர்ச்சகர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், ஹிந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுஉள்ளது.
சட்டத் திருத்தம்
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு அமைந்த பின், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து, சமீபத்தில் 208 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதை எதிர்த்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான சுப்ரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்ரமணியன் சுவாமி வாதிட்டதாவது:தமிழகத்தில் உள்ள, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்களின் நிர்வாகத்தை தமிழக அரசு கைப்பற்றியுள்ளது. இது, ஹிந்து மக்களின் உரிமையை மீறுவதாகும்.இந்நிலையில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கோவில் அர்ச்சகர் என்பதை மதச்சார்ப்பற்ற நடவடிக்கை என்று குறிப்பிட முடியாது; குறிப்பிடவும் கூடாது.
அவ்வாறு குறிப்பிட்டாலும், அதை மாநில அரசு வாயிலாக செயல்படுத்த முடியாது. கோவில் அறக்கட்டளை அல்லது மத அமைப்புகள் வாயிலாகவே மேற்கொள்ள முடியும்.
சட்டவிரோதம்
ஹிந்து கோவில்கள், பல ஆகம விதிகள், பாரம்பரிய நடைமுறைகளுக்கு உட்பட்டே இயங்க வேண்டும். அதனால், உரிய ஆகம பயிற்சி இல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சட்டவிரோதமாகும். மேலும் விக்கிரகங்களின் புனிதத்தன்மைக்கு எதிராக அமைந்துவிடும். இது, ஹிந்து பக்தர்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை மீறும் செயல்.
அதனால், அர்ச்சகர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். எந்த நியமனத்தையும் மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசு நாத்திக கொள்கையை உடையது. சமயம் சார்ந்த செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. அது, சமயம் சார்ந்த அமைப்புகளிடமே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அதையடுத்து, அமர்வு கூறியுள்ளதாவது:இந்த விவகாரத்தில் எந்த இடைக்கால தடையும் பிறப்பிக்க முடியாது. இது குறித்து பதிலளிக்க, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வழக்குகள் நிலுவை
தமிழகம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரி, தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளுடன் இணைத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, வழக்கின் விசாரணை செப்., மாத இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்