பனாஜி: நடிகை சோனாலி போகட் மரண வழக்கை, தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகட் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 22-ம் தேதி கோவா சென்றிருந்தார். அடுத்த நாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
2 பேர் கைது
இதனிடையே, அவரது உடலில்காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உதவியாளர் மற்றும் அவரது நண்பர் என 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சோனாலிக்கு குளிர்பானத்தில் போதைமருந்து கலந்து கொடுத்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனிடையே, இந்த வழக்கில் கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “சோனாலி மரணம் குறித்த வழக்கை கோவா போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனசோனாலி குடும்பத்தினர் விரும்புவதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் என்னிடம் தெரிவித்தார். இதில் பிரச்சினை எதுவும் இல்லை. தேவைப்பட்டால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என்றார்.