நியூசிலாந்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் ‘ஆட்டை’ போட்ட நைஜீரியன் கைது; கோவா போலீஸ் அதிரடி

பனாஜி: நியூசிலாந்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த நைஜீரியனை கோவா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெளிநாடுகளில் தேடி வந்தார். அவர் ஆன்லைன் தனியார் வேலைவாய்ப்பு மையத்தில் தனது வேலைக்கான விபரங்களை பதிவு செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இபியானி காலின்ஸ் சிக்வெண்டு (39) என்பவர், நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதற்காக முன்பதிவு கட்டணமாக சில லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த இளைஞர், தவணை முறையில் கிட்டதட்ட ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இபியானி காலின்ஸ் சிக்வெண்டுக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால், அவர் கூறியபடி நியூசிலாந்தில் வேலை வாங்கித் தரவில்லை. அதையடுத்து அவர் மீது சைபர் கிரைம் போலீசில் கோவா இளைஞர் புகார் அளித்தார். இதுகுறித்து ேகாவா போலீஸ் அதிகாரி தேவேந்திர பிங்கிள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட கோவா இளைஞர், நைஜீரிய நாட்டை சேர்ந்த இபியானிக்கு மூன்று முறை பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் பிரிவை அணுகி புகார் அளித்தார். பெங்களூரு காவல்துறையின் ஒத்துழைப்பு மூலமும், உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையிலும் பெங்களூருவில் பதுங்கியிருந்த இபியானியை கைது செய்தோம். தற்போது இபியானியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.5 லட்சத்துக்கும் அதிகமான பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.