வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 26 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வரவேற்பு அறையில் இருந்த கண்ணாடி நொறுங்கியது.
விடுதி ஊழியர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி கண்டறியப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது.
37 வயதான இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. இவர் ஒரு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்பதும் தொழில் போட்டியின் காரணமாக இதை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நான்காண்டுகளாக அந்த தனியார் விடுதியில் பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
ஹோட்டலுக்கு வரக்கூடிய பெரும் பணக்காரர்களுக்கு பெண்களை அனுப்பி வந்த நிலையில் அப்பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தனியார் ரெசிடென்சி நிறுவனம் தனியாக பெண்களை வைத்து பாலியல் தொழில் ஆரம்பித்துள்ளது. அப்பொழுது தனது அனுமதி இல்லாமல் இதை செய்யக்கூடாது என்னுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்று வினோத் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் நண்பரை அழைத்துக் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள வினோத்தின் நண்பரை போலீஸ் தேடி வருகின்றனர். மேலும், தனியார் விடுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.