ஒன் பை டூ

”கே.பி.ராமலிங்கம், தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர்

“அரசியல் தெரிந்த அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. காரணம், ராகுல் காந்திக்கு அரசியல் கட்சித் தலைவருக்கு உண்டான அரசியல் ஆளுமை, இன்றைக்கு மட்டுமின்றி என்றைக்குமே இருந்தது இல்லை. கட்சியின் உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லும் பக்குவம் அவருக்குக் கிடையாது. அரசியலில் முழு அர்ப்பணிப்பு இல்லாமல், விளையாட்டுப்பிள்ளையாக ராகுல் இருப்பதாகவே பெரும்பான்மையான இந்தியர்கள் கருதுகிறார்கள். இதைத்தான் குலாம் நபி ஆசாத் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். 50 ஆண்டுக்காலம் காங்கிரஸில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் குலாம் நபி ஆசாத். சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என நேருவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாகவும், நம்பிக்கையானவராகவும் இருந்தவர் அவர். ராகுல் காந்தியுடன் நீண்டநாள் பயணித்தவர், உடனிருந்து பழகியவர். அதனால், உண்மை நிலவரத்தைப் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அவருக்கு, கருத்து சொல்ல அனைத்துத் தகுதிகளும் உண்டு. அவர் சொல்வதில் முழு நியாயமும் உண்டு. குடும்ப அரசியல் காரணமாக இவர்கள் காங்கிரஸிலுள்ள மூத்த தலைவர் களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். அவரது விமர்சனத்தை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள்தான், `குலாம் நபி ஆசாத்தை பா.ஜ.க இயக்குகிறது’ என்று சொல்கிறார்கள். அதில் எந்த உண்மையும் கிடையாது.”

கே.பி.ராமலிங்கம்
செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்

“அநாகரிகமான விமர்சனம். வெறுப்பு அரசியல் செய்துகொண்டிருக்கிறார் குலாம் நபி ஆசாத். இதே கட்சியின் மூலமாகச் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர் என்று பல்வேறு உயர் பொறுப்புகளை அனுபவித்துவிட்டு, அதே கட்சியின் தலைவர்கள்மீது சகட்டுமேனிக்குச் சகதி வாரி இறைப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதே குலாம் நபி ஆசாத், ‘தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்’ என்று பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார். இவர்தான் எண்ணற்ற முறை ராகுல் காந்தி திறமையானவர் என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். தற்போது அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை, கட்சியிலும் எந்தப் பெரிய பதவியும் கொடுக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாட்டில் இப்படியெல்லாம் பேசுவது அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் அழகே அல்ல. இவரைப் பின்னாலிருந்து யாரும் இயக்குகிறார்களா என்று தெரியவில்லை. ராகுல் காந்தியைக் குறைகூறிய கையோடு, மோடியை அவர் புகழ்ந்திருப்பது அந்தச் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. மோடியைவிட மக்கள்மீதும், நாட்டின்மீதும் அக்கறைகொண்டவர் ராகுல். `பாரத் ஜோடோ’ என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதயாத்திரையின் வெற்றி, ராகுல் காந்தியை விமர்சித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.