புத்தகப் பை இல்லா நாள் | மாணவர்கள் சுமையைக் குறைக்க புதிய கல்விக் கொள்கையை தழுவி ம.பி. அரசு அறிவிப்பு

போபால்: பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் வாரம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்தியப் பிரதேச முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அரசு இந்தத் திட்டத்தை தழுவியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகுப்பிற்கு எத்தனை கிலோ பை? புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாநில அரசு புத்தகப் பை அளவை பள்ளிக் கல்வித் துறை வாயிலாக சுற்றறிக்கை மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி 1, 2ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான எடையில் இருக்க வேண்டும். 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை 1.7 முதல் 2.5 கிலோ வரை இருக்கலாம். 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கலாம். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடையானது அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரால் மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவை பொருத்து அமையும்.

இதுதவிர பயிற்சி புத்தகங்கள், கையெழுத்து பயிற்சி புத்தங்கள் ஆகியனவற்றை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறையிலேயே வைத்துச் செல்லலாம். கணினி அறிவியல், நல்லொழுக்கப் பாடம், பொது அறிவியல், சுகாதாரம், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் கலை சார்ந்த பாடப் புத்தகங்களை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு கொண்டுவரத் தேவையில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளிகள் வளாகத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளில் மாணவர்களின் அனுமதிக்கப்பட்ட புத்தகப் பை எடை குறித்து விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். அதேபோல், பள்ளி மாணவர்களின் கையேட்டிலும் இந்த விவரங்கள் நிச்சயமாக இடம்பெற வேண்டும்.இவை மட்டுமில்லாது பள்ளிகள் அவற்றின் வசதிக்கு ஏற்ப வாரத்தில் ஏதேனும் ஒருநாள் புத்தகப் பை ல்லாத நாளாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாடத்திலும் திருத்தம்: அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடத்திலும் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது. 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 மணி நேரத்திற்கு மிகாமல் மட்டுமே வீட்டுப்பாடம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.