காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். ‘விசா’வுக்காக காத்திருந்த ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகம் அமைந்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய துாதரகத்தில், விசா பெறுவதற்காக பலர் நேற்று காத்திருந்தனர்.அப்போது, விசா கிடைத்துள்ளோரின் பெயர்களை, அங்கிருந்த ஊழியர் அழைத்துள்ளார். அந்த நேரத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்தார்; 10க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விசாரணைக்கு உத்தரவிடும்படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலிபான் அரசை வலியுறுத்தியுள்ளார்.இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, காபூல் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துாதரகத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் சுட்டனர். உயிரிழப்பதற்கு முன்பாக, அவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாரா அல்லது போலீசார் சுட்ட குண்டால் அந்த குண்டு வெடித்ததா என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement