குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி, வாணியம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அஜித்குமார்(26). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகள் ரீட்டா(22). பி.எட். 2ம் ஆண்டு படித்து வந்த இவர் நெல்லூர்பேட்டை ஊராட்சி வார்டு உறுப்பினராக (கவுன்சிலர்) இருந்தார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்துள்ளனர். இந்நிலையில், அஜித்குமாருக்கு தனது தாயாருடன் குடும்ப பிரச்னை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்று முன்தினம் மாலையும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அஜித்குமார், அதே பகுதியில் உள்ள ஏரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காதலன் தற்கொலை செய்த தகவலை அறிந்த காதலி ரீட்டா மன வேதனையடைந்தார். இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியாத்தம் தாலுகா மற்றும் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.