கைப்பந்து போட்டி: புரசைவாக்கம் பெண்கள் அரசு பள்ளி 'சாம்பியன்'

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றன. கடைசி நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி (புரசைவாக்கம் ராட்லர் வீதி) 25-23, 25-12 என்ற செட் கணக்கில் லேடி சிவசாமி அணியை (மயிலாப்பூர்) தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வேலம்மாள் அணி (மெயின்) 25-19, 25-13 என்ற நேர் செட்டில் பிரசிடென்சியை வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவின் இறுதிசுற்றில் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி (சாந்தோம்) 25-17, 12-25, 25-23 என்ற செட் கணக்கில் டான் போஸ்கோவை ( பெரம்பூர்) வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தியது. இதன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் செயின்ட் பீட்டர்ஸ் 25-12, 25-18 என்ற நேர் செட்டில் மான்போர்ட்டை வென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சான் அகாடமி குழும நிர்வாக இயக்குனர் அர்ச்சனா, வருமானவரி இணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி சந்திரசேகர், எஸ்.டி.ஏ.டி. துணை பொதுமேலாளர் மெர்சி ரெஜினா, முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் யோகநாதன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் அர்ஜூன் துரை, நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், தினகரன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், ராஜபாளையத்தில் நடந்த இளையோர் கைப்பந்து போட்டியில் பட்டம் வென்ற சென்னை மாவட்ட பெண்கள் அணியினருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அத்துடன் கைப்பந்து பயிற்சியாளர் 8 பேருக்கு, முன்னாள் வீரர் சித்திரைபாண்டியன் நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.