திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக் காணிக்கை செலுத்தினார். துலாபாரத்தில் மகனின் எடைக்கு எடையாக பச்சரிசி, வெல்லம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவிலேயே உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனக் கூறினார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரின் கையெழுத்திற்காக எனது இனமே காத்துக் கொண்டிருக்கிறது என வேதனையுடன் கூறினார். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.
ராகுல் காந்தியின் நடைபயணம் அவரின் உடலுக்கும், கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வையும் கொடுக்குமே தவிர மக்களுக்கு இல்லை. ஜி.எஸ்.டி, நீட், சி.ஏ.ஏ போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சிதான் இதனால்தான் காங்கிரஸ் கட்சியினரால் எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை. அனைவரும் மாடலாக தான் இருக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை.

நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறதே, தற்போது நிதி நிலைமை வலிமை பெற்று விட்டதா? கஞ்சா, குட்கா அபின் ஹெராயின், போன்றவற்றை போதைப் பொருள்கள் என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், டாஸ்மாக்கில் விற்கக்கூடிய மதுபானங்கள் என்பது நாழிக்கிணற்றுத் தீர்த்தமா?” என்ற கேள்வியுடன் முடித்தார்.