சிஐஎஸ்எஃப் என்பது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில், சமீபத்தில் விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமான நிலையங்களில் 3,049 சிஐஎஸ்எஃப் பணியிடங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பதில் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்போடு விளையாடுகிறது என கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறது.