காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த திருக்குமரன் நகர் பை – பாஸ் சாலை அருகே ஆரோக்கிய லட்சுமி உடனுறை தன்வந்திரி பகவான் கோயில் புதிதாக கட்டப்பட்டு  கோயிலுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் மற்றும் துவார பூஜைகள், பாலிகா பூஜை, அக்னி பிரதிஷ்டைகளுடன் நடைபெற்றதை தொடர்ந்து கலச புறப்பாடு செய்யப்பட்டு கோயில் நுழை வாயில் கோபுர கலசங்களுக்கும், மூலவர் கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து,  தன்வந்திரி பகவானுக்கு  சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில், திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தன்வந்திரி பகவானை தரிசித்து சென்றனர். பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில், திரையரங்குகள் சங்க மாநில தலைவர் அபிராமி ராமநாதன் குடும்பத்தினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மைலப்பன், நிர்வாக தலைவர் சுந்தர்ராஜ், கௌரவ தலைவர் அழகேசன், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் பழனி, திருக்கழுக்குன்றம் ரோட்டரி சங்க தலைவர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் பழமையான ஸ்ரீ  ராதா, ஸ்ரீ  ருக்மணி உடனுறை ஸ்ரீ  வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளாக சிதலமடைந்து கிடந்தது. இதையடுத்து கிராம பொதுமக்கள் நிதி திரட்டி பழைய கோயிலை இடித்து அகற்றி ஸ்ரீ  ராதா, ஸ்ரீ  ருக்மணி உடனுறை வேணுகோபாலசாமிக்கு புதிய கோயில் கட்டபட்டது. இதையடுத்து, கோயிலுக்கான குடமுழுக்கு விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, யாக சாலை அமைத்து நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் அர்ச்சகர்களால் கோயிலை சுற்றி சென்று கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர். ஸ்ரீ  ராதா, ஸ்ரீ  ருக்மணி, ஸ்ரீ  வேணுகோபாலசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் 1000 பேருக்கு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் அன்னதானம் வழங்கினார். உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ  ஆதித்ய பால ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கோயிலில் புனரமைக்கும் பணியானது துவங்கி சில மாதங்களாக நடந்து வந்தது. புனரமைப்பு பணி அண்மையில் முடிவடைந்த நிலையில் நேற்று கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, நேற்று காலை மூன்றாம்கால யாக வேள்வி பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு காஞ்சி திமுக தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ., ஒன்றிய செயலாளர் டி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியாசக்திவேல் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு ஸ்ரீ  ஆதித்ய பால ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம்  கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ  திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அப்பகுதி மக்கள் சிதிலமடைந்த பகுதியை சீரமைப்பு செய்தல், கோயில் கோபுரம் வர்ணம் பூசுதல், புதிய சாமி சிலைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து செய்து முடிக்கப்பட்டதை அடுத்து அதன் கும்பாபிஷேக  விழாவையொட்டி கோயில் வளாகத்தில் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, மகா தீபாரதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை நேற்று காலை 5 மணி அளவில் விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மகாபாரதி மகா தீபாரதனை, கலச புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மூலவர் திரவுபதி அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிலாவட்டம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.