ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த2021-ல் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் குவாரி ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையம், கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பெஸ்ஸுக்கு தனது பரிந்துரையை அனுப்பி வைத்தது.
முதல்வர் ஹேமந்த் சோரனின்எம்எல்ஏ பதவியை பறிக்க ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆளுநர் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதை தடுக்க முதல்வர் ஹேமந்த் சோரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்றிரவு விமானத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 81 எம்எல்ஏக்களில் அரசுக்கு ஆதரவாக 48 பேர் வாக்களித்தனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 29, காங்கிரஸ் 15 மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பாஜக 25 மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக அவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசும்போது, “கடைகளில் ஆடைகள், காய்கறிகள் வாங்குவது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாஜக தலைமை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எம்எல்ஏக்களை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறது. அந்த கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.