டெல்லியில் 2வது நாளாக முகாம் கெஜ்ரிவாலுடன் நிதிஷ் சந்திப்பு

புதுடெல்லி: பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த நிதிஷ் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக, பாஜ கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் அவர் டெல்லி வந்தார். டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், 2ம் நாளாக நேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில், ‘‘எனது இல்லத்திற்கு வந்து சந்தித்ததற்காக நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கல்வி, சுகாதாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தும் ஆபரேஷன் தாமரை, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்’’ என்றார். இன்றும் நிதிஷ்குமார் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை
இந்த சந்திப்புகளின் போது பேட்டி அளித்த நிதிஷ் குமார், ‘‘அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் நேரம் இது. பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையில்லை. அதற்கு உரிமை கோரவும் இல்லை. எதிர்க்கட்சிகளை ஓரணயில் திரட்ட வேண்டுமென்பதற்காகத்தான் உழைக்கிறேன்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.