பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயிலில் வரும் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜைக்கு காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் வரும் 9-ம் ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதற்காக பட்டாச்சாரியார்கள், மூவலூரில் காவிரி நதியில் இருந்து புனித நீர் எடுத்து யானை மீது ஏறி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து, கஜ, அஸ்வ, கோ பூஜை மற்றும் ஒட்டகத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காவிரியில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து 8 கால பூஜை நடத்தப்பட உள்ளது.