சியோல்: சக்தி வாய்ந்த சூறாவளியான, ‘ஹின்னம்னார்’ தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது, சாலைகள் பெரும் சேதம் அடைந்தன, 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின, ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், ‘ஹின்னம்னார்’ என்ற சூறாவளி மையம் கொண்டது. அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந் நிலையில் அது நேற்று சொகுசு விடுதிகள் அடங்கிய சுற்றுலா தலமான ஜெஜு தீவு – துறைமுக நகரான புசான் இடையே கரையை கடந்தது.
அப்போது 133 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதன் பின் கொரிய தீபகற்பம் – ஜப்பான் கடற்பகுதி நோக்கி சூறாவளி நகர்ந்தது. இது வரும் வாரங்களில் கிழக்கு சீன பகுதியை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சூறாவளி கரையை கடக்கும் போது, தென் கொரியா முழுதும் கனமழை வெளுத்து வாங்கியது.
3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியது.சாலைகள் சேதம் அடைந்தன, மின் கம்பங்கள், மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன, 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. 3,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
‘இது, தென் கொரியா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளி’ என தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஹான் டக்சூ, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டார். இந்த சூறாவளியில் சிக்கி, 70 வயது பெண் மற்றும் 25 வயது இளைஞர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement