உறுப்பு திருட்டில் ஈடுபடும் சீனா…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு

ரோம்,

இத்தாலி நாட்டில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகை பனோரமாவில் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி வெளியான கட்டுரை ஒன்றில், விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காட்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், வலைதளம் ஒன்றின் வழியே பதில் அளித்து இருந்தது. கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி வெளியிடப்பட்ட அந்த பதிலில், அவதூறு மற்றும் விசயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கில் செயல்படுகிறது என பனோரமா மீது குற்றச்சாட்டு கூறியதுடன் கட்டுரைக்கு கடுமையான கண்டனமும் தெரிவித்து இருந்தது.

அந்த செய்தியில், சட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படும் நாடு சீனா. மனித உறுப்புகளை விற்பதற்கும், சட்டவிரோத உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கும் சீன சட்டங்கள் தடை விதித்து உள்ளன.

சீனாவில், அனைத்து அறுவை சிகிச்சை நடைமுறைகளும், தன்னிச்சையாக உறுப்புகளை நன்கொடையாக வழங்குபவர்களிடம் இருந்தே பெறப்பட்டு நடத்தப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.

கட்டாயப்படுத்தி மனித உறுப்புகள் அறுவடை செய்யப்படுகின்றன என்பது ஒரு புரளி. அது, சீனா மீது அச்சம் ஏற்படுவதற்கு, அல்லது வெறுப்பு ஏற்படுவதற்காக, சீனாவுக்கு எதிரான சக்திகளால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக புனையப்பட்ட விசயங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஏமாற்றும் செயல் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், இதற்கு பனோரமா செய்தி நிறுவனம் பதிலடியாக, மனித உறுப்புகள் திருடப்படுவது பற்றிய செய்திகள், மருத்துவ இதழ்களில் வெளியான தகவல்களை இதே துறையிலுள்ள பல்வேறு நிபுணர்கள் ஆராய்ச்சி மற்றும் மறுஆய்வு செய்ததன் அடிப்படையில் வெளியான தரவுகளையே ஆவணங்களாக்கி இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.