'பாஜக கனவு ஒருபோதும் பலிக்காது!' – குமரியில் கெத்து காட்டிய ராகுல் காந்தி!

பாஜகவின் கனவு எப்போதும் பலிக்காது என, ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாலையில் கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். ராகுல் காந்தியை இன்முகத்துடன் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து, ராகுல் காந்தியிடம் தேசியக் கொடி வழங்கி, இந்திய ஒற்றுமை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் நாட்டுக்கான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இங்கு பறக்கும் தேசியக் கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாளம் இந்தக் கொடி. இந்த அனைவருக்கும் சொந்தமானது.

ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் தேசியக் கொடியை அவர்களுடைய சொந்தப் பொருள் போல் கருதுகின்றனர். இந்த நாட்டின் எதிர்காலத்தை அவர்களால் மட்டுமே கட்டமைக்க முடியும் என எண்ணுகின்றனர். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டுகின்றனர். இந்திய மக்களை பற்றி பாஜகவுக்கு தெரியவில்லை. இந்திய மக்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்று..

மதம், மொழி உள்ளிட்டவற்றால் நாட்டை பிளவு படுத்தி விடலாம் என, பாஜக நினைக்கிறது. ஆனால் இதை பாஜகவால் ஒருபோதும் செய்ய முடியாது. இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பாஜக தான் காரணம். நாட்டை பேரழிவுக்கு பாஜக கொண்டு சென்றுள்ளது.

பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் நினைப்பது மட்டுமே செய்திகளில் வர வேண்டும் என நினைக்கின்றனர். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளன. அவர்கள் இல்லையேல் பிரதமர் நரேந்திர மோடி இல்லை.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை எல்லாம் பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டன. இது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் மனநிலையையே காட்டுகிறது. அவர்கள் ஆட்சி செய்வது போல் இந்திய மக்களை பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மோடி ஆட்சியில் செயலிழந்துள்ளன. வரலாற்றில் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

அனைவரையும் ஒன்றிணைப்பதே இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம். இந்தப் பயணத்தின் மூலம் நாட்டு மக்கள் கோரிக்கைகளையும், அவர்களது விருப்பத்தையும் கேட்க முடிவு செய்துள்ளேன். தமிழகத்திற்கு எப்போதும் வந்தாலும் மகிழ்ச்சி. எனக்காக இங்கு வந்த தமிழக முதலமைச்சர் அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.