சென்னை: கேரளத்தின் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அழகிய ஓணம் திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவத்தையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துகள் இந்த அம்ருத காலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கேரளத்து சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, தேச ஒற்றுமையுடன், நேசத்துடன் கேரளத்து சகோதர, சகோதரிகள் அனைத்து செல்வங்களும், இன்பங்களும் பெறவும், ஓணம் பண்டிகையன்று இடும் பூக்கோலத்தைப் போலவே அனைவரின் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘மாயோன் மேய ஓண நன்னாள்’ எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: திருவோணத் திருநாளில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளத்தில் வாழும் தமிழக மக்களும் சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான திருவிழா ஓணம். இந்நாளில் தமிழக பாஜக சார்பில் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கலாசாரத்தை காப்பாற்றி சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஓணம் திருநாளைக் கொண்டாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீட்டிக்க ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: மகாபலியின் ஆட்சியில் மகிழ்ந்திருந்த மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஓணம் திருநாளில் தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைத்து வளமும், நலமும் பெற வாழ்த்துகிறேன்.
சு.திருநாவுக்கரசர் எம்.பி: இந்நன்னாளில் தமிழர்களோடு எப்போதும் போல் மலையாள மக்களும் இரண்டறக் கலந்து சகோதரர்களாய் மகிழ்வோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாரிவேந்தர் எம்.பி: உலகெங்கும் வாழும் மலையாள சகோதர – சகோதரிகளுக்கு என் இனிய திருவோணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஓணம் நன்னாளில் சாதி, மதங்களைக் கடந்து அனைவரும் சகோதரர்களாக வாழ உறுதியேற்போம்.
வி.கே.சசிகலா: திருவோணத் திருநாளான நன்னாளில் போட்டி, பொறாமை, ஆணவம் அகன்று பசி, பிணி, பகை நீங்கி, சமத்துவத்துட னும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதே போல்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.ஜி.சிவா ஆகியோரும் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.