சென்னை: சமீப காலமாக அதிக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள்
திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்கு நடக்கும் அவலங்களை புட்டு புட்டு வைக்கும் ராஜன் நடிகர்கள் செய்யும் விஷயங்களையும் கண்டிப்பார்.
சமீபத்தில் கொடை என்கிற படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எப்படி கொடை பன்பு வந்தது என்று பேசியுள்ளார்.
ராஜனின் நற்செயல்
ஒரு சினிமா நிகழ்ச்சியிலோ வேறு நிகழ்ச்சியிலோ சினிமா நபர்கள் கலந்து கொண்டால் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். அப்படி தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 5000 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது. அப்படி வாங்கும் பணத்துடன் தன்னுடைய சொந்த பணம் பத்தாயிரம் ரூபாயை சேர்த்து 15,000 ரூபாயாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பணம் இல்லாமல் சிரமப்படும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்காக டொனேஷன் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் கே.ராஜன். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேலாக மாணவர்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக கொடை என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறியுள்ளார்.

நடிகர்களுக்கு போட்டி
அதேபோல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தனக்கு வருவதாகவும் ஒரு படத்தில் நடிப்பதற்காக தனக்கு கிடைத்த அட்வான்ஸ் பணமான ஒரு லட்ச ரூபாய் பணத்தை நலிந்திருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு டொனேஷனாக கொடுத்துள்ளதாகவும் இதனை விளம்பரத்திற்காக செய்ய வேண்டியது இல்லை அதனை பார்த்து போட்டிக்காகவாவது நடிகர்கள் செய்ய வேண்டும். முடிந்தால் என்னுடன் இதில் போட்டி போடுங்கள் என்று கே.ராஜன் பெருமையாக பேசியுள்ளார். கொடை என்கிற அழகான தமிழ்ப் பெயர் வைத்ததற்கும் கேரளாவிலிருந்து தமிழில் நடிக்க வந்த கதாநாயகி தமிழில் பேச முயற்சித்ததற்கும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் தமிழோடு வாழ வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

என்,எஸ்.கே எம்.ஜி.ஆர்
படத்தின் பெயர் கொடை என்பதால் தமிழ் சினிமாவில் கொடை வள்ளலாக இருந்த நடிகர்கள் பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். வழக்கமாக வள்ளல் என்றால் எம்.ஜி.ஆரை சொல்வார்கள் ஆனால் எம்ஜிஆருக்கே அந்த வள்ளல் தன்மையை கற்றுக் கொடுத்தது மறைந்த நடிகர் என்.எஸ்.கே அவர்கள்தான். அவர் நடத்திய நாடகக் குழுவில் 100 ரூபாய் சம்பளத்திற்காக நடித்துக் கொண்டிருந்தவர் தான் எம்.ஜி.ஆர். அந்தச் சம்பளம் வரும் பொழுது உனக்காக டிக்கெட் எடுத்து உன்னை பார்க்க வரும் ரசிகர்கள் ஏழ்மையானவர்கள். நீ சம்பாதிக்கும் பணத்தில் அந்த ஏழ்மையானவர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் என்று என்.எஸ்.கே அறிவுரை கூறினாராம். என்னை வள்ளல் ஆக்கியது கலைவாணர்தான் என்று எம்.ஜி.ஆரே பலமுறை கூறியுள்ளாராம்.

ஒன்றுமில்லாமல் இறந்தார்
என்.எஸ்.கே அவர்கள் தன்னிடம் இருந்த அனைத்தையும் தானமாக கொடுத்துவிட்டதாகவும் ஒரு கொலை வழக்கில் இவரும் நடிகர் எம்.கே.டி அவர்களும் சிக்கி பணத்தை இழந்தார். அவ்வளவு பணம் சம்பாதித்தவர் சாகும்போது ஒன்றுமே இல்லாமல் இறந்ததாகவும் கே.ராஜன் அந்த நிகழ்வில் கூறியுள்ளார்.