தடகள விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினையொட்டி குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது.
ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
செட்டிகுளம் அரசு பள்ளி சாதனை
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இதேபோல் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.