திருப்பூர்: முறைகேடாக இயங்கி வரும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தனது தோட்டத்தில் 10-வது நாளாக விவசாயி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த நிலையில், ஒரு குவாரிக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில், கொத்துமுட்டிபாளையத்தில் தனியார் கல்குவாரி மற்றும் ஜல்லி ஆலை இயங்கி வருகிறது. அரசின் நிபந்தனைகளை மீறி பாறையை அதிக வெடிமருந்து வைத்து தகர்ப்பது, அதிக ஆழத்துக்கு தோண்டுவது என செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கனிம வளத்தை விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்துள்ளது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது.
முறைகேடுகளுடன் இயங்கி வரும் தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயி விஜயகுமார் என்பவர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தொடர்ந்து நேற்று 10-ம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தை கடைபிடித்தார். இவரை பின்தொடர்ந்து, ஒட்டன்தோட்டத்தில் செயல்பட்டு வரும் மற்றொரு கல்குவாரியிலும் முறைகேடு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரும் தனது தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
கல்குவாரிக்கு எதிராக இந்த இரண்டு விவசாயிகளின் போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஒரு குவாரிக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார். மேலும், கல்குவாரி விவகாரத்தில், பல்லடம் வட்டாட்சியர் தலைமையிலான வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் மூலம் தணிக்கை செய்து, நாளை (செப். 10) அறிக்கை அளிக்கும்படியும், மேற்படி குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குவாரி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டாலும் விவசாயி விஜயகுமார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் தரப்பில் கூறும்போது, “ஆட்சியர் என்ன உத்தரவு போட்டுள்ளார் என்பதை, உத்தரவு நகலை நேரில் பார்த்த பிறகே, போராட்டத்தை திரும்பபெற முடியும். இதுவரை உத்தரவு கடிதம் கைக்கு வரவில்லை. ஆகவே போராட்டம் தொடர்கிறது” என்றனர். இந்நிலையில் விஜயகுமார் 10-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.