பெரியாறு அணையில் இருந்து 2வது சுரங்கப்பாதை அமைத்து தண்ணீர் கொண்டு வர வழக்கு: பொதுப்பணித் துறை முதன்மை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: பெரியாறு அணையில் இருந்து 2ம் சுரங்கப்பாதை அமைத்து தண்ணீர் கொண்டு வரக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தரராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியாறு அணை நீரால் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணை பலமிழந்ததாக கூறி நீர் தேக்கும் அளவு 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனால், தென்மாவட்ட தேவை பாதித்தது. அதே நேரம் 2014ல், பெரியாறு அணையில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அதன்பிறகு, நீர்மட்டம் 142 அடிக்குமேல் வரும் போது கேரளாவுக்கு வீணாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

தமிழகப் பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தண்ணீர் திறந்து விட்டால் கேரளாவிற்கு வீணாக தண்ணீரை வெளியேற்ற வேண்டியதில்லை. 2014 உச்சநீதிமன்ற உத்தரவில், தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்திட 2வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நீர்வரத்து பகுதியான முல்லைக்கொடியில் இருந்து கண்ணகி கோயில் மலை பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து லோயர் கேம்ப் பளியன்குடி வழியாக தண்ணீரை வெளியேற்றும் வகையிலும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாம். இத்திட்டத்தின்மூலம் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். எனவே, பெரியாறு அணையில் இருந்து இரண்டாவது சுரங்கப்பாதை அமைத்து கூடுதல் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘பெரியாறு அணையில் கூடுதல் சுரங்கப் பாதை அமைத்து தண்ணீர் கொண்டு வருவதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தொடர் ஆய்வில் உள்ளனர். அவர்களது ஆய்வறிக்கையை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட பகுதிகள் புலிகள் சரணாலய பகுதிக்குள் வருகிறது. இதுவும் ஆய்வின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.