மதுரை: மதுரைக்கு நேற்றுமாலை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடியில் கட்டப்பட்ட மாநாட்டு மையம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.44.10 கோடியில் கட்டப்பட்ட பன்னடுக்கு வாகன காப்பகத்தை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 6 மணிக்கு மதுரை வந்தடைந்தார். மாலை 6.45 மணிக்கு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் நடந்த மதுரை வேலம்மாள் குழும தலைவர் இல்ல திருமண வரவேற்பில் முதல்வர் பங்கேற்றார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 47.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
இங்கிருந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே 44.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னடுக்கு வாகன காப்பகத்திற்கான கல்வெட்டையும் திறந்தார்.
தொடர்ந்து, மாநாட்டு மையத்திற்குள் சென்ற முதல்வர் அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். மாநாட்டு மையம் குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனையும் முதல்வர் கண்டு ரசித்தார். முன்னதாக மேயர் இந்திராணி பொன்வசந்த் முதல்வரை வரவேற்றார். கலெக்டர் அனீஷ் சேகர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை சர்க்யூட் ஹவுசில் நேற்றிரவு ஓய்வெடுத்த முதல்வர், இன்று காலை மதுரை பாண்டிகோவில் அருகே நடைபெறவுள்ள தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.