திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, 5வது நாள் நடைபயணத்தை நேற்று காலை 7 மணிக்கு கேரளாவில் தொடங்கினார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 3 நாள் பயணத்தை குமரியில் மேற்கொண்டார். நேற்று முன்தினம் 4ம் நாளில் குமரி மாவட்டத்தை கடந்து கேரளாவுக்குள் அவர் நுழைந்தார். அப்போது அவருக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாறசாலையில் அருகே உள்ள மேல்நிலை பள்ளியில் இரவு அவர் ஓய்வெடுத்தார். 5வது நாள் நடை பயணத்தை நேற்று காலை 7 மணிக்கு அவரும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் தொடங்கினார்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தாரிக் அன்வர், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எம்பிக்கள் சசிதரூர், முரளிதரன் உள்ளிட்ட தலைவர்கள் நடை பயணத்தில் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு நெய்யாற்றின் கரையில் காலை பயணத்தை ராகுல் முடித்தார். பின்னர், ஊரூட்டுகாலா பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியும், மகாத்மா காந்தியின் நண்பருமான ராமச்சந்திரனின் வீட்டில் ராகுல் ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு மீண்டும் நடை பயணத்தை தொடங்கினார். திருவனந்தபுரம் நகர எல்லையில் உள்ள நேமத்தில் நேற்றைய நடைபயணம் நிறைவு பெற்றது. இரவில் வெள்ளாயணி விவசாய கல்லூரியில் தங்கினார். இன்று காலை நேமத்தில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார்.