அரக்கோணம்: அரக்கோணத்தில் சாலையுடன் சேர்த்து அமைக்கப்பட்ட அடி பம்பை உயர்த்தி சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தாசில்தார் குறுக்குத்தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. அப்போது, அங்கிருந்த அடி பம்புடன் சேர்த்து சாலை போடப்பட்டது. இதனால், அடி பம்பை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
மேலும், முறையின்றி சாலைப் பணியை மேற்கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. இதுபற்றி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி நேற்று வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் வந்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நேற்று பம்பை உயர்த்தி தண்ணீர் பிடிக்கும் வகையில் அதனை சீரமைத்தனர்.