பாட்னா: பீகாரில் உள்ள எல்.என்.பல்கலைக்கழக தேர்வு நுழைவு சீட்டில் பிரதமர் மோடி, ஆளுநர் பாகுசவுகான், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலம், தர்பங்காவில் எல்.என். பல்கலைக் கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி, சமஸ்திப்பூர், பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. அப்போது மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
இதில், பிரதமர் மோடி, ஆளுநர் பாகு சவுகான், கிரிக்கெட் வீரர் தோனி படங்கள் இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்கலைக் கழக பதிவாளர் முஸ்தாக் அகமது கூறும்போது, ‘ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் எப்ஐஆர் பதிவு செய்யப்படும். விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.