“இலங்கை தமிழர்கள் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை” – ஐநாவில் அதிருப்தி தெரிவித்த இந்தியா

ஜெனீவா: ஐநா சபையில் இலங்கை தமிழர்கள் இனப்பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசினார். அதில், “இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை நிரூபித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாடு கடந்த காலத்தை விட வலுவானது.

எனினும், இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் அந்நாட்டு அரசால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் போன்ற அரசியல் தீர்வுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு அதிக சுயாட்சியை வழங்குவதற்காக மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது போன்ற பிரச்சினைகள் குறித்து சமீப ஆண்டுகளில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்திவருகிறது.

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நிலையான பார்வை என்பது இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையிலும், ஐக்கிய இலங்கை கட்டமைப்பிற்கு அரசியல் தீர்வு கிடைக்கும் வகையிலும் உள்ளது. எனவே தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் உட்பட மாகாண சபைகளுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து குடிமக்களும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் விருப்பத்தை அடைய உதவும். எனவே, இந்த விஷயத்தில் உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று இலங்கை அரசை வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.