சிவகங்கையில் 25 தலைமுறையாக நடக்கிறது எருமைகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் திருவிழா: 16 எருமை, 100 கிடாக்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்

சிவகங்கை: சிவகங்கையில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் விநோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.சிவகங்கையில் உள்ள பையூர் பழமலை நகரில் காட்டுராஜா சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து செப். 8ல் காப்பு கட்டினர். மது எடுப்புடன் நிறைவடையும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது.

காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்படுகின்றன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீச்சியடிக்கும் ரத்தம் அப்படியே குடிக்கப்படுகிறது. காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிடுகின்றனர். இவ்வாறு நேற்று 16 எருமை மாடுகளும், 100க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்களும் வெட்டப்பட்டன. இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகின்றனர். அந்த கறியை அந்த குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் உள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்தனுப்புகின்றனர். தலையை மட்டும் பயன்படுத்துவதில்லை. இவ்விழா அனைவரும் முடிவு செய்து ஆண்டுதோறுமோ அல்லது சில ஆண்டுகள் இடைவெளி விட்டோ நடத்தப்படுகிறது. காளி, அசுரனை (எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்த்தெழும் எனவும் அதனால் அதை சிந்தவிடாமல் குடித்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.