புதுக்கோட்டை: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டத்தில் 77, மணமேல்குடியில் 53, ஆவுடையார்கோவில் மற்றும் கறம்பக்குடியில் தலா 19 மற்றும் ஆலங்குடியில் 2 என மொத்தமுள்ள 170 கண்மாய்களில், காவிரி நீரை தேக்கி வைத்து 21 ஆயிரம் ஏக்கரில் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையின்போது மட்டுமே கல்லணைக் கால்வாய் வழியாக புதுக்கோட்டை கடைமடைக்கு நீர் அதிகளவு திறந்துவிடப்படும். கோடையில் மிகக் குறைந்த அளவே நீர் திறக்கப்படும். இதனால், கோடை சாகுபடி செய்யப்படுவதில்லை.
நிகழாண்டு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், மேட்டூர் அணையில் இருந்த உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருமளவு நீர், கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்குத் திருப்பி விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் வழியாக தினமும் 2,700 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மேற்பனைக்காடு பகுதிக்கு 300 கன அடி வீதமும், அதைக் கடந்து நாகுடிக்கு 200 கன அடி வீதமும் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான கண்மாய்கள் இந்த முறை நிரம்பியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், நம்பிக்கையுடன் சாகுபடிப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனப் பிரிவு அலுவலர்கள் கூறியது: ”நிகழாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதாலும், காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டதாலும் தேவைக்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு நீர் எடுக்கப்பட்டது. இதனால், 58 கண்மாய்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 45 கண்மாய்கள் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், 42 கண்மாய்கள் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும், 22 கண்மாய்கள் 70 சதவீதத்துக்கு அதிகமாகவும், 3 கண்மாய்கள் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நிரம்பியுள்ளன.
வழக்கமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரைப் பயன்படுத்தி ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்து விவசாயிகள் பழக்கப்பட்டுவிட்டதால், இந்த முறை நீர் வந்தும்கூட யாரும் கோடை சாகுபடி செய்யவில்லை. இருப்பினும், சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர்” என்றனர்.