வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கடமைகளை பொறுப்பேற்பு

2022 செப்டம்பர் 09ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற எனிமையான வைபவமொன்றில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணியை வினைத்திறனுடன் தொடர்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரிக்கு ஆதரவளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

2015இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, 2019 நவம்பரில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்தார். முன்னதாக, அவர் சப்ரகமுவ மாகாண சபையின் உறுப்பினராக 2012ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, அமெரிக்காவின் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, இங்கிலாந்தின் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் பயின்றார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 செப்டம்பர் 09

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.