
அரவிந்த்சாமி படத்தின் இரண்டாம் பாகம் சீக்குவலா? ப்ரீக்குவலா?
சமீபத்தில் மலையாளத்தில் ஓட்டு என்கிற திரைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை தீவண்டி என்கிற படத்தை இயக்கிய டிபி பெலினி என்பவர் இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் இன்டர்வல் டுவிஸ்ட் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் இரண்டுமே ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றன. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக இதற்கு இரண்டாம் பாகம் உண்டு என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
அதேசமயம் கிளைமாக்ஸ் காட்சியின்படி பார்க்கும்போது இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் இனிமேல் நடக்க உள்ள கதைக்கான சீக்குவலாகவும் இருக்கலாம்.. அல்லது இந்தக்கதைக்கு முன்பு நடந்த கதையாக பிரீக்குவலாகவும் இருக்கலாம் என இரண்டு விதமான இரண்டாம் பாகங்களுக்கும் வாய்ப்பு இருப்பதையும் கோடிட்டு காட்டி இருக்கிறது. தமிழில் ரெண்டகம் என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் போஸ்ட் புரொடக்சன் தாமதம் காரணமாக ஒரே தேதியில் வெளியாகவில்லை.. இன்னும் சில நாட்களில் இந்தப்படம் தமிழில் வெளியாகும் என்று தெரிகிறது.