அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் 3-வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. ரெய்டுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை பொய் வழக்குப் போட்டிருக்கிறது. ஸ்டாலின் தொடர்ந்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எத்தனையோ தலைவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இவரைப் போல எந்தத் தலைவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. இவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை. இவர்களுக்கும் மேல் ஒருவன் இருக்கிறான். எங்கள் வீட்டில் ரூ.7,500 பணம் மட்டுமே இருந்தது. வேறு எதுவும் கைபற்றப்படவில்லை.
என் வழக்கு எப்போதெல்லாம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதற்காக ஊடகங்கள் மூலம் பொய்யை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் சொல்வதுதான் தீர்ப்பாக வரவேண்டும் என அழுத்தம் கொடுப்பார்கள்.

ஆனால், நீதியரசர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சென்னையில் யார் வீட்டில் சோதனை நடக்கிறது என்றே தெரியவில்லை, ஊடகங்களில் நெருங்கிய நண்பர் என்று போடுகின்றனர். அவர் யார் என்று ஊடகத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்கிறோம்.
ஏற்கெனவே போட்ட இரண்டும் பொய் வழக்குகள் எனத் தெரிந்ததால், புதிதாக ஒரு வழக்கை போட்டிருக்கின்றனர். மின்கட்டண உயர்வை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது. கோவை காவல்துறை மிகப் பெரிய அத்துமீறலை செய்திருக்கிறது. அரசியல் பழிவாங்கலின் உச்சகட்டத்துக்கு போய்விட்டனர்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடியார் முதல்வராகப் போகிறார். அதனால் பயம் வந்துவிட்டது. மூன்று ரெய்டிலும், என் வீட்டிலிருந்த ஷோபா, சேர் இவற்றை மட்டுமே போட்டோ எடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஸ்டாலின் பழிவாங்கி, என்னை மிரட்டிப் பார்க்கலாம் என்றால் அது நடக்காது. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா எல்.இ.டி பல்பு திட்டத்தை கொண்டு வந்தார். அது மின் சேமிப்புக்காக கொண்டு வந்த திட்டம். அதில் டெண்டருக்கும், அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டில் ஸ்டாலின் குடும்பம் ரூ. 5,000 கோடிக்கு சம்பாதித்திருக்கிறது. அமைச்சர்களை துன்புறுத்தி சம்பாதிக்கின்றனர். தமிழ்நாட்டையே சுரண்டுகின்றனர்“ என்றார்.