புதுடில்லி :”சுங்கச் சாவடிகளே இல்லாமல், வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:நாடு முழுதும் சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கான வருவாய், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.கடந்த 2018 – 2019ல் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம், எட்டு நிமிடங்களாக இருந்தது. பாஸ்டேக் முறை வந்தப் பின் அது, 47 வினாடிகளாக குறைந்து உள்ளது.இருப்பினும் சில இடங்களில் தற்போதும் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
தவிர்க்கும் வகையில், இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒன்று, ஜி.பி.எஸ்., எனப்படும் செயற்கைக்கோள் வாயிலாக, வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது.மற்றொன்று, வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் கண்டு, அதனடிப்படையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது. இந்த முறை அமலுக்கு வந்தால், சுங்கச் சாவடிகளே தேவையிருக்காது.இதற்கான தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் உள்ளது. இருப்பினும் இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement