செகந்திராபாத், :தெலுங்கானாவின் செகந்திராபாதில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்தனர். தரைதளத்தில் உள்ள மின்சார ‘ஸ்கூட்டர்’ விற்பனை மையத்தில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இங்கு, செகந்திராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது.தரைதளத்தில், மின்சார ஸ்கூட்டர் விற்பனை செய்யும் மையத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ‘சார்ஜிங்’ செய்யப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர்களில் மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இதில், அந்த மையத்தில் இருந்த, 40 மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்தன. இதனால், கடும் புகை மண்டலம் ஏற்பட்டு மேல் தளங்களையும் சூழ்ந்து கொண்டது.மேல் தளங்களில், 24 அறைகளுடன் கூடிய ஹோட்டல் உள்ளது. அங்கு 25 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீ மற்றும் புகை சூழ்ந்ததையடுத்து, அவர்கள் அவசரமாக வெளியேற முயன்றனர்.ஆனால், கரும் புகை சூழ்ந்ததால், மூச்சுவிட முடியாமல், எட்டு பேர் பலியாகினர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
தீயைவிட, கரும் புகையால் இவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தினர்.இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய், காயமடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தன் இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டார்.உயிரிழந்தோர் குடும்பத் திற்கு, மாநில அரசின் சார்பில், தலா, மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement