“18-ம் ஆண்டில் தேமுதிக… யாரிடமும் பணம் வசூல் செய்யாமல் கட்சியை வளர்க்கிறோம்” – விஜயகாந்த்

சென்னை: “கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம்” என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பல்வேறு சவால்களைத் தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவைடந்து நாளை (செப்.14) 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது.

தேமுதிகவிற்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. தேமுதிக சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு துவங்கப்பட்ட இயக்கமாகும். எந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வராமல் சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழகம் முழுவதும் கிளைகள் மற்றும் பூத்துகளை அமைத்து வெற்றிநடை போடுகிறது.

லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. லட்சக்கணக்கான தொண்டர்களின் உண்மையான உழைப்பால் உருவான நமது கழகம், முதலில் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்டு, 2000-மாவது ஆண்டு ரசிகர் மன்றத்திற்கு என கொடி அறிமுகப்படுத்தி பின்னாளில் அரசியல் கட்சியாக மாறி மக்களின் ஆதரவோடு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியாக உயர்ந்தது.

இதற்கு உண்மையான தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழக மக்களும்தான் காரணம். என் தொண்டர்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம்.

இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், சூழ்ச்சிகள், வந்தபோதும் பல சவால்களை சந்தித்து தற்போதும் வீறுநடை போடுகிறது நமது கழகம். தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.