பெங்களூரு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு செப்டம்பர் 14-ம் தேதியை ‘இந்தி மொழி நாள்’ (இந்தி திவஸ்) என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடகாவில் இந்தி மொழி நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை (இன்று) இந்தி மொழி தினத்தை கர்நாடக அரசு சார்பில் கொண்டாடுவதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மஜத மூத்த தலைவர் குமாரசாமி முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடகாவில் கன்னட மொழியை கொண்டாடுவதை தவிர்த்து, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது.