காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியா கொலை குறித்து போலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் கெட்டிக்காரர். அத்துடன் கலை நிகழ்ச்சியிலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
காரைக்காலில் அதிர்ச்சி
பள்ளியில் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. பாலமணிகண்டன் நேற்றைய தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன், எனக்கு பள்ளியில் ஜூஸ் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். நான் அது போல் எந்த ஜூஸையும் கொடுத்து அனுப்பவில்லையே என மாலதி அதிர்ச்சியுடன் சொன்னார்.

மாணவன் மர்ம மரணம்
உடனே பாலமணிகண்டன் 3 முறை வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி பாலமணிகண்டனுடன் படிக்கும் சகமாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரிதான் பள்ளி காவலாளி தேவதாஸிடம் எதையோ கொடுத்தது தெரியவந்தது.

குளிர்பானத்தில் விஷம்
விசாரணையில் பால மணிகண்டனுடன் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சகாயராணி விக்டோரியா என்பவர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

எலி பேஸ்ட்
சகாயராணியை காரைக்கால் நகர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. பேதி மருந்து மட்டும் கொடுத்து மாணவனை கொலை செய்ததாக ஏற்கனவே சகாயராணி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தற்போது கடையில் எலி பேஸ்ட் வாங்கி மாணவன் பாலமணிகண்டனை கொன்றதாக சகாயராணி வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகளைவிட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.