கோவாவில் காலியாகும் காங்கிரஸ் – 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்!

கோவா மாநிலத்தில் அதிரடி திருப்பமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் இன்று ஆளும் கட்சியான பாஜகவில் இணைய உள்ளனர்.

கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜகவுக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் கூட்டணி மற்றும் சுயேச்சைகள் 5 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 8 எம்எல்ஏக்கள் இன்று, பாஜகவில் இணைய உள்ளனர். மூத்தத் தலைவர்களான திகம்பர் காமத் மற்றும் மைக்கேல் லோபோ உள்ளிட்டோர் இன்று பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர்.

எட்டு எம்எல்ஏக்கள் ஓர் அணியாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு பலம் இருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதை அவர்கள் தவிர்க்கலாம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதை, கோவா மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், கோவா மாநில முதலமைச்சர் பிரசோத் சவாந்தை சந்தித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்களின் இந்த கட்சித் தாவல் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.