நெஞ்சு வலி வருவதை உணர்ந்து பேருந்து பத்திரமாக நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுனரால் 40 பயணிகள் உயிர் தப்பினர். ஆனால், ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்கலம் வரை செல்லும் அரசு ஷபேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் புருஷோத்தமனுக்கு (58) திடீரென நெஞ்சு வலி ஏற்படவே பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அதே இடத்தில் மயங்கி விழுந்த அவரை நடத்துனர் மற்றும் பயணிகள் மீட்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், உயிரிழந்த ஓட்டுநர் அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தைச் சார்ந்த கனகசபை என்பவரின் மகன் புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.. தனது உயிர் பிரியும் நேரத்திலும் முறையாக கடமையை செய்து பயணிகளை காப்பாற்றிய புருஷோத்தமனுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
