நெல்லை : பாளை ரஹ்மத்நகர் மக்கள் குடிநீர் இணைப்பு கேட்டும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மேலப்பாளையம் பகுதி மக்களும் மனு அளித்தனர்.
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா, மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, பிரான்சிஸ், உதவி செயற்பொறியாளர்கள் ராமசாமி, பைஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகந்நாதன் தலைமையில் ரஹ்மத் நகர் மக்கள் மேயரிடம் அளித்த மனுவில், ‘‘ரஹ்மத் நகர் 80 அடி சாலை கிழக்கு பகுதியில் சில வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது. 15 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பின்றி திண்டாடுகின்றனர். எனவே விரைந்து அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நெல்லை டவுன் 18வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில் வாகைக்குளம் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘நெல்லை மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட வாகைக்குளம் பகுதியில் தேவேந்திரகுல சமுதாய மக்களாகிய நாங்கள் குடியிருந்து வருகிறோம்.
40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் நுழைவு வாயிலில் பயணிகள் நிழற்குடை கட்டினோம். அங்கு சமுதாய கொடி கம்பம் வைத்து தியாகி இமானுவேல் சேகரனார் படத்தை வைத்து நினைவு நாள் அனுசரித்தோம். படத்தை தொடர்ந்து அங்கு வைத்து நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். காவல்துறையின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு இந்த படத்தை அங்கு வைத்திருப்ேபாம் என்று உறுதி கூறுகிறோம்” என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் ஆனையர்குளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘‘55வது வார்டு ஆனையர்குளத்தை சீரமைத்துத் தரவேண்டும். அங்கு குளம் தூர்வாரப்பட்டால் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது குளமே இல்லாததால், தண்ணீர் முழுவதும் தியாகராஜநகர் பகுதிக்கு வந்து விடுகிறது. அதாவது குளத்தை தூர் வாரி தண்ணீர் தேங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி தலைமையில் மேயரிடம் அளித்த மனுவில், ‘‘மேலப்பாளையம் பகுதியில் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள 47வது வார்டு மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். மேலப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகள் சாலையில் திரிகின்றன. அவைகளை சாலையில் திரிய விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாளை சித்த மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த சாலையோர வியாபாரிகள் அளித்த மனுவில், ‘‘சித்த மருத்துவக்கல்லூரி சாலையில் எவ்வித இடையூறும் இன்றி, உணவு வண்டிகள் அமைத்து மலிவு விலையில் உணவுகள் வழங்கி வந்தோம். கடை நடக்காவிட்டால் எங்களது குடும்பம் வறுமையில் வாடும். எனவே நாங்கள் தொடர்ந்து கடை நடத்திட அனுமதி வழங்கும்படி கேட்டு கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் தலைமையில் துணைச்செயலாளர் மாரிராஜா, வட்டச் செயலாளர்கள் ராகவன், தங்கவேல், வேலாயுதம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ‘‘எங்களது நெல்லை டவுன் 22வது வார்டில் சுந்தரவிநாயகர் கோயில் கீழத்தெரு பகுதியில் மட்டுமே பாதாள சாக்கடை வசதி உள்ளது. ஆண்டாள்புரம், மலையாள மேடு பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இல்லை. எனவே விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.’’ என அதில் தெரிவித்திருந்தனர்.