மணிரத்னம் இயக்கத்தில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவிடமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
இயக்கநர் மணிரத்னம் பேசியதன் அடிப்படையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், படத்தின் மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்கள் இருவர், சிம்பு நடிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்களாம். மேலும், படத்தில் நடிக்காத ஒரு நடிகை ஆரம்பத்தில் நடிக்க இருந்தபோது அவரும் சிம்பு நடிப்பதை விரும்பவில்லையாம். இதனை கேள்விப்பட்ட சிம்பு, தானாகவே விலகிக் கொள்வதாக இயக்குநர் மணிரத்னத்திடம் தெரிவித்துவிட்டாராம். செக்க சிவந்த வானம் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த சிம்புவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விரும்பியிருக்கிறார் அவர். ஆனால், இதுபோன்ற காரணங்களால் பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வம் இல்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் இப்படியும் ஒரு பேச்சு அடிபடுகிறது. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு ரிலீஸாகும் சிம்பு படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். முதல் காட்சி படம் பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கி எழுந்து வருமாறு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றையும் கொடுத்துள்ளார்.