பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கொடுத்த எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான் முறையாக இருக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது.

இதன்படி, வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர, அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதோடு, இந்தப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமையும் உருவாகும்.

இந்தச் சூழ்நிலையில், நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டியும், கருப்பு கொடிகளை கையில் ஏந்தியும் போராட்டங்களை நடத்தியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், மாண்புமிகு அமைச்சர்கள் தாமதமாக வந்ததன் காரணமாக, அந்தக் கூட்டத்தை சிலர் புறக்கணித்து விட்டதாகவும், சிலர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இது தங்கள் முன்னோர்கள் நிலம் என்றும், அரசு கொடுக்கும் பணத்தை வைத்து சிறிது காலம் தான் வாழ முடியும் என்றும், விமான நிலையத்திற்கு நிலத்தை கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அதே சமயத்தில், சந்தை விலைக்கேற்ப இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்றும், விமான நிலையத்திற்காக நிலம் கொடுப்போரின் குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையையும், அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆராய்ந்து பார்த்தால், பெயரளவிற்கு கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு துவங்க உள்ளது தெள்ளத் தெளிவாகிறது.

இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும். தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற அடிப்படையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவது முக்கியமானது என்றாலும், அதைவிட முக்கியமானது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்கு உணர்ந்து இருக்கிறது.

விவசாயிகளின் வீழ்ச்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது. மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.

விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான் முறையாக இருக்கும். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல் துறை முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இது போன்ற நடவடிக்கை அங்குள்ள ஏழை எளிய மக்களை அச்சுறுத்துவதாக அமையும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தெரிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

‘மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும்’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கு மாறாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும்பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.