தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “திமுக அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு ஒரு நுனி அளவுக்கு கூட நன்மை கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் மக்களுக்கு வேதனையும், துன்பமும் மட்டும் தான் மிஞ்சியது.

திமுக ஒரு குடும்ப ஆட்சி. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி, அதிகாரம் வேண்டுமென இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட நான்கு முதலமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். திமுக குடும்ப அதிகார மையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

இந்த குடும்ப ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. திராவிடம் மாடல் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்த உடன் சொத்து வரியை உயர்த்தினார்கள். அது மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் மக்கள் பல நன்மைகளை பெற்றனர். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மக்களின் தலையில் இவ்வளவு பெரிய சுமையை சுமத்துவது நியாயமா? மக்களின் வேதனையை புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றார்.