ஓபிஎஸ் இபிஎஸ் மோதலில் நடுவில் சிக்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக உட்கட்சி மோதல் தொடர்ந்து வரும் நிலையில் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக பண்ருட்டி ராமச் சந்திரனை சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரனும், “எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது எனவும், அவரின் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது” என செய்தியாளர்களிடம் பேசினார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, “பண்ருட்டி ராமச்சந்திரன் எந்தக் கட்சிக்கு போய் அறிவுரை கூறுகிறாரோ, அந்தக் கட்சிகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே, அவரது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளைச் செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது” என்று காட்டமாக பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன், பெரியார் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அனைவருடனும் பயணித்தவர். கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், பண்ருட்டி ராமச்சந்திரனை உலகத்திலே உச்சபட்சமாக இருக்கும் ஐநா சபையில் உரையாற்ற அனுப்பிவைத்தார். அங்கு உரையாற்றி அதிமுகவுக்கு பெருமையை பெற்றுத்தந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரின் தொண்டு, தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் குறித்து ஓபிஎஸ்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசு தன் கடமையை செய்கிறது. யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ, தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.