கேரள அரசியலில் பரபரப்பு முதல்வர், கவர்னர் மோதல் முற்றியது

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில  மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களில் சட்டத்தை மீறி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உறவினர்களை நியமிப்பதற்கு  கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும். பினராய்  விஜயனின் உதவியாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசுக்கு கண்ணூர்  பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இது  குறித்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேரடியாகவே விமர்சனம்  செய்திருந்தார்.  

இந்நிலையில் கவர்னர்  ஆரிப் முகம்மது கானுக்கு முதல்வர்  பினராய் விஜயன் முதல் முறையாக பதிலடி தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று அவர் கூறுகையில், ‘‘என்னுடைய உதவியாளரின் உறவினர்  என்பதற்காக எந்த வேலைக்கும் விண்ணப்பிக்க கூடாது என்று கூற முடியுமா?  அதற்கு என்னிடம் அவர்கள் அனுமதி வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது. தகுதி  இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் வேலையில் சேரக்கூடாது  என்று கூற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இதற்காகத்தான் கவர்னர் தன்னுடைய அதிகாரத்தை  பயன்படுத்துகிறாரா? வேந்தர் பதவியையும் இதற்காகத்தான் அவர்  பயன்படுத்துகிறாரா?’’ என்றார். கவர்னர் ஆரிப் முகமது கான் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘அரசுக்கு எதிரான என் புகார்களை நிரூபிக்கும் முக்கிய ஆவணங்களை நான் கேரளா திரும்பிய உடன் வெளியிடுவேன்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.