சென்னை: விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி வெளியான ‘கோப்ரா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
கோப்ராவைத் தொடர்ந்து விக்ரமும் அஜய் ஞானமுத்துவும் இணையவிருந்த அடுத்த படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய கோப்ரா
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை மிரட்டி வரும் சியான் விக்ரம், தற்போது பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே கடந்த மாதம் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ திரைப்படம் ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது.

சொதப்பிய கோப்ரா திரைக்கதை
அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் டபுள் ஆக்சனில் நடித்திருந்தார். க்ரைம் திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். கோப்ரா திரைப்படம் தரமான கூட்டணியில் உருவாகியிருந்தாலும், சொதப்பலான திரைக்கதை, படத்தின் நீளம் போன்றவற்றால் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா தோல்வியடைந்ததோடு, வசூலிலும் கோட்டை விட்டது.

விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணி?
கோப்ரா படத்தை அதிகம் நம்பியிருந்த விக்ரம், அதன் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம் விக்ரமின் நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனிடையே கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கதில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் விக்ரமிற்காக அடுத்து ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட் ரெடியாகி வருகிறது எனக் கூறியிருந்தார்.

கைவிடப்படுகிறதா அடுத்த படம்?
இந்நிலையில், விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், கோப்ரா’ திரைப்படம் கொடுத்த மோசமான தோல்வியால், அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் எனக் கூறப்பட்ட அந்தப் படம், தொடங்கப்படுவதற்கு முன்னரே கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், இதுவரை விக்ரம், அஜய் ஞானமுத்து தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவலும் அறிவிக்கப்படவில்லை.