திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு மாணவனை கடத்தியவர் தற்கொலை: கேரளா சென்று மீட்டு வந்தது போலீஸ்

திருப்பூர்: திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு 10ம் வகுப்பு மாணவனை கடத்தியவர் போலீசுக்கு பயந்து கேரளா லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவனை கேரளா சென்று போலீசார் மீட்டனர். திருப்பூர் அருகே வேலம்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை வீடு கட்டி விற்பனை செய்கிறார்.  இவருக்கு 3 ஆண்டுக்கு முன்பு கட்டிட காண்டிராக்டரான கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராகேஷ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 100 வீடுகள் கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக ராகேஷ் தனது பங்களிப்பாக ரூ.38 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது. இதன் பின்னர் நிலம் வாங்கி பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வீடு கட்டும் இடத்தை ராகேஷ் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அந்த இடம் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். தருவதாக கூறியவர், அந்த பணத்தை கொடுக்காமலே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், அவரது நிறுவன பணியாளர்களை கடந்த ஜூலை மாதம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. புகாரின்படி பெருமாநல்லூர் போலீசார் இரு தரப்பினரும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ராகேசுக்கு ரூ.38 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்குமாறு கூறி பிரச்னை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 100 வீடு கட்டி கொடுத்திருந்தால் தனக்கு ரூ.5 கோடி கிடைத்திருக்கும். தற்போது அது கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த ராகேஷ் அடிக்கடி மாணவரின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் மாணவரின் பெற்றோர் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது காரில் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப்போட்டு, வீட்டில் பணம் இருக்கிறதா? என தேடினர். பணம் இல்லாததால், பள்ளி முடிந்து திரும்பிய மாணவரை 3 பேரும் கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். ‘‘ரூ.5 கோடி கொடுத்துவிட்டு மகனை மீட்டுக்கொள்’’ எனக்கூறி சென்றுள்ளனர். அப்போது 3 பேரில் ஒருவரது முகமூடி விலகவே அந்த நபர் ராகேஷ் என்பது மாணவரின் தந்தைக்கு தெரியவந்தது. இதுபற்றி புகாரின்படி 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மாணவரையும் ராகேஷையும் தேடினர். ராகேஷ் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு மாணவரை கடத்திச்சென்றிருக்கலாம் என கருதி போலீசார் அங்கு விரைந்தனர். இந்நிலையில் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த ராகேஷ் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், மாணவர் மட்டும் இருப்பதையும் அங்குள்ள போலீசார் மூலம் அறிந்து அவரை மீட்டனர். கடத்தியவர்களில் மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.