வேலூரில் காவல்நிலையம் அருகே நள்ளிரவு பிச்சை எடுக்கும் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்; பெண் குழந்தை பிறந்தது

வேலூர்: வேலூரில் காவல்நிலையம் அருகே நள்ளிரவு பிச்சை எடுக்கும் பெண்ணிற்கு, பெண் போலீஸ்காரர் பிரசவம் பார்த்ததில், அழகான பெண் குழந்தை பிறந்தது. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக இருப்பவர் இளவரசி. இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தபோது எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுது கொண்டிருந்தார். சத்தம் கேட்டு, இளவரசி அருகே சென்று பார்த்தபோது, பிச்சை எடுக்கும் இளம்பெண் பிரவச வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இளம்பெண்ணுடன் 6 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது.

இதையடுத்து, போலீஸ் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த எஸ்ஐ பத்மநாபன், பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்து சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளம்பெண் கூறுகையில், ‘திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் என்னை விட்டு விட்டு சென்றதால் அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தர வேண்டும் என வற்புறுத்தினர். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருகிறேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.