சியோபூர்: இந்தியா கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளுக்கு முதல்முறையாக எருமை இறைச்சி உணவாக தரப்பட்டது. தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கடந்த 17ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பிரத்யேக பகுதியில் அவற்றை பிரதமர் மோடி திறந்து விட்டார். நமீபியாவில் இருந்து 8,000 கி.மீ. தூரம் வரை கொண்டு வர வேண்டியிருந்ததால், அவை உணவு கொடுக்காமல் இந்தியாவுக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், இந்த 8 சிவிங்கி புலிகளுக்கும் இந்தியா வந்த பிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் மாலை உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சிவிங்கி புலிக்கும் தலா 2 கிலோ எருமை இறைச்சி கொடுக்கப்பட்டது. இதில் ஒரு புலி மட்டுமே சற்று குறைவாக உணவருந்தியதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன பெயர்?
சிவிங்கி புலிகளுக்கு ஏற்கனவே நமீபியா அதிகாரிகள் பெயர் சூட்டி உள்ளனர். இந்த பெயரை தற்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லை என குனோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறி உள்ளனர். தற்போது அவைகளுக்கு பிரெடி, ஆல்ட்டன், சவானா, சாஷா, ஓபன், ஆஷா, சிபிலி, சாய்சா என பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் பிரெடி, ஆல்ட்டன் என்ற 2 ஆண் குட்டிகள் மிகவும் துறுதுறுவென்று விளையாடிக் கொண்டிருப்பதாகவும் சவானா, சாஷா என்ற 2 பெண் குட்டிகள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மீதமுள்ள ஓபன், ஆஷா, சிபிலி, சாய்சா ஆகிய நான்கும் உல்லாசமாக இருக்கின்றன என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.